வெப்ப நிலை, மழை அளவு குறித்து அறிய வசதி: மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் தானியங்கி வானிலை கருவி
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் வெப்ப நிலை, மழை அளவு, காற்றின் வேகம், ஈரப்பதம் அறிவதற்கான தானியங்கி வானிலை கருவியினை தொல்லியல் துறையினர் அமைத்துள்ளனர்.;
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சிற்பங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது.
இந்த புராதன சின்னங்களை மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஊரில் வானிலை பற்றிய தகவல் அறிய இதற்கு முன்பு கடற்கரை கோவில் வளாகத்தில் சாதாரண கருவி அமைக்கப்பட்டது. அக்கருவி நாளடைவில் செயல்படாமல் சிதிலமடைந்து வீணாகி போனது. இதையடுத்து தற்போது புதிதாக ‘ஆட்டோமேடிக் வெதர் ஸ்டேஷன்’ எனப்படும் தானியங்கி வானிலை கருவி கடற்கரை கோவில் வளாகத்தில் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது. இதில், தினசரி வெப்ப நிலை, மழைப்பொழிவு மற்றும் அதன் அளவு, காற்றின் வேகம், ஈரப்பதம் உள்ளிட்ட விபரங்கள் இக்கருவியில் தாமாக பதிவாகும்.
குறிப்பாக கடற்கரையில் வீசும் காற்றில் உப்பு துகல்கள் படிந்து சிற்பங்கள் சிதிலமடைகின்றன. இந்த கருவி மூலம் அடிக்கடி காற்றின் வேகத்தை கண்காணித்து சிற்பங்களின் பாதுகாப்பு வழிமுறைகைள கடைபிடிக்க பேருதவியாக இருக்கும் என்றும் தொல்லியல் துறையினர் நம்புகின்றனர். மேலும் இங்கு பதிவாகும் வானிலை பற்றிய தகவல்களை தொல்லியல் துறை தலைமையகத்தின் இணையதள தொடர்பு மூலம் நேரடியாக அறிய இயலும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.