எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஆந்திராவை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஆந்திராவை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கு விசாரணைக்கு பயந்து உடலை அப்புறப்படுத்திய ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் பின்புறத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக எழும்பூர் போலீசாருக்கு கடந்த 9-ந்தேதி தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக தனியார் விடுதியின் மேலாளர் பீர் முகமது (வயது 54), விடுதி ஊழியர் ரவி (43) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், இருவரிடமும் தொடர்ந்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் விடுதியின் பின்புறம் இறந்து கிடந்த நபர், ஆந்திர மாநிலம் வாராங்கல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (45) என்பது தெரியவந்தது. இவர், கடந்த 3-ந்தேதி விடுதியில் அறை எடுத்து தங்கினார். பின்னர் நீண்டநேரம் ஆகியும் அவரது அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் பீர் முகமது மற்றும் ஊழியர் ரவி இருவரும் ஜன்னல் வழியாக பார்த்தபோது ராஜ்குமார், அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
பின்னர் வழக்கு விசாரணைக்கு பயந்து, இருவரும் சேர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் நள்ளிரவில் விடுதி மேலே இருந்து ராஜ்குமார் உடலை கீழே தூக்கி வீசிவிட்டு, எதுவும் தெரியாததுபோல் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து விடுதி மேலாளர் பீர் முகமது, ஊழியர் ரவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.