கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி: போக்குவரத்து போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் பலியானார். இதை கண்டித்து போக்குவரத்து போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-19 06:24 GMT
திருவொற்றியூர்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65). இவர், நேற்று மாலை தனது நண்பரான மனோகரன் என்பவருடன் மணலி புதுநகரில் உள்ள மற்றொரு நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை மனோகரன் ஓட்ட, அவருக்கு பின்னால் சீனிவாசன் அமர்ந்திருந்தார்.

மணலி புதுநகர் அய்யா கோவில் அருகே சாலை வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்ப முயற்சித்தபோது, அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி, இவர்கள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சீனிவாசன் மீது கன்டெய்னர் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய சீனிவாசன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மனோகரன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மனோகரனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவலறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அந்த பகுதியில் அதிக அளவில் கன்டெய்னர் லாரிகள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், குடியிருப்பு பகுதிகளில் கன்டெய்னர் லாரி போக்குவரத்தை தடை செய்யவேண்டும் என்றும் கூறி போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கன்டெய்னர் லாரி டிரைவரான சேலத்தை சேர்ந்த முருகன் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்