திண்டுக்கல் அருகே டைல்ஸ் கடையை உடைத்து பணம் திருட்டு
திண்டுக்கல் அருகே டைல்ஸ் கடையை உடைத்து ரூ.15 ஆயிரம், செல்போனை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர், செட்டிநாயக்கன்பட்டி பிரிவு அருகே உள்ள சத்யா நகரில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 16-ந்தேதி இரவு இவர், வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடையை அவர் திறக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.15 ஆயிரம், செல்போன் ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் இருந்த அவரது பான்கார்டு, ஆதார் அட்டையையும் திருடர்கள் எடுத்து சென்றிருந்தனர்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கடையில் திருடப்பட்ட பான்கார்டு, ஆதார் அட்டை ஆகியவை விஜயகுமாரின் வீட்டின் அருகே வீசப்பட்டிருந்தது. இதனால் விஜயகுமாரை பற்றி நன்றாக தெரிந்த நபர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.