4 பேர் சாவில் மைனர் பெண் கைது; கூலி வேலைக்கு அனுப்பியதால் தீர்த்துக் கட்டியதாக வாக்குமூலம்

சித்ரதுர்காவில், ஒரே குடும்பத்தினர் 4 பேர் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக ராகி உருண்டையில் விஷம் கலந்து கொன்றதாக மைனர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை கூலி வேலைக்கு அனுப்பிய ஆத்திரத்தில் அவர் இவ்வாறு செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2021-10-18 21:31 GMT
சித்ரதுர்கா: சித்ரதுர்காவில், ஒரே குடும்பத்தினர் 4 பேர் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக ராகி உருண்டையில் விஷம் கலந்து கொன்றதாக மைனர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை கூலி வேலைக்கு அனுப்பிய ஆத்திரத்தில் அவர் இவ்வாறு செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

 ஒரே குடும்பத்தினர் 4 பேர் சாவு

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா இசாம்முத்ரா கிராமத்தை சேர்ந்தவர் திப்பாநாயக்(வயது 46). இவரது மனைவி சுதாபாய்(43). இந்த தம்பதிக்கு ராகுல்(18), ரம்யா (16) மற்றும் 17 வயதில் மகள் ஒருவள் என 3 பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி இரவு திப்பாநாயக், சுதாபாய், ராகுல், ரம்யா மற்றும் திப்பா நாயக்கின் தாய் குந்திபாய் ஆகிய 5 பேரும் ராகி களி சமைத்து சாப்பிட்டுள்ளனர். 

சாப்பிட்ட சிறிது நேரத்தில் திப்பாநாயக் உள்பட 5 பேருக்கும் திடீரெனை வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் 5 பேரையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி திப்பாநாயக், சுதாபாய், ரம்யா, குந்திபாய் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராகுல் குணமடைந்தார். ராகி களி உருண்டை சாப்பிட்டு உயிரிழந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பரமசாகரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

சந்தேகத்தில் விசாரணை

உணவு விஷமாக மாறி 4 பேரும் இறந்திருக்க கூடும் என்ற கோணத்தில் போலீசார் கருதினர். இதற்கிடையே 4 பேர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் வயிற்றில் இருந்த ராகி களியின் மாதிரியை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் ராகி களியில் விஷம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் திப்பநாயக்கின் 17 வயது மைனர் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மைனர் பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

மைனர் பெண் கைது

அப்போது இரவு சாப்பிட்டதில் நீங்கள் மட்டும் (மைனர் பெண்) பாதிக்காமல் இருப்பது எப்படி என்று போலீசார் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அந்த மைனர் பெண் சம்பவத்தன்று சாம்பார் சாதம் சாப்பிட்டேன் என்றார். ஆனாலும் மைனர் பெண்ணிடம் போலீசார் துருவி, துருவி கேள்வி கேட்டனர்.

 இதனால் வேறு வழியின்றி மைனர் பெண் குடும்பத்தினர் 4 பேரையும் விஷம் வைத்து நான் தான் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டார். இதையடுத்து மைனர் பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தில் மைனர் பெண் தெரிவித்ததாக போலீசார் கூறியதாவது:- 

பரபரப்பு

குடும்பத்தினர் வறுமையை காரணம் காட்டி என்னை கட்டாயப்படுத்தி கூலி வேலைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் நானும் வீட்டில் ஒருவள் என்று பெற்றோர், சகோதர, சகோதரி கருதவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சம்பவத்தன்று இரவு சமைக்கப்பட்ட ராகி களியில் விஷ மருந்து கலந்தேன். அந்த விஷம் கலந்த ராகி களியை சாப்பிட்டு பெற்றோர், சகோதரர், சகோதரி மற்றும் பாட்டி இறந்தனர் என்று மைனர் பெண் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத்தினர் 4 பேரை விஷம் வைத்து தானே கொன்றதாக மைனர் பெண் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்