பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல்: அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் குவிந்தனர்

பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அடைந்த ஏராளமானவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.;

Update: 2021-10-18 21:17 GMT
ஈரோடு
பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அடைந்த ஏராளமானவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
காய்ச்சல் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதுபோல் அண்டை மாவட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்கிறது. இதனால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இரவில் குளிர் காற்று வீசுகிறது. இது பொதுமக்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கொரோனா அச்சம், டெங்கு காய்ச்சல் பீதியில் பொதுமக்கள் இருப்பதால், காய்ச்சல் அறிகுறி தென்பட்டதும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வருகிறார்கள். அதன்படி நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் அறிகுறியுடன் ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்து டோக்கன் போட்ட பிறகே டாக்டர்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சலால் வந்தவர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இது அவர்களுக்குள் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பயத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி டாக்டர் ஒருவர் கூறும்போது, ‘தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல் தொடர்ச்சியாக இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.
டோக்கன்
தற்போதைய சூழல் கருதி காய்ச்சல் மற்றும் பிற நோய்களால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் டோக்கன் போடும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
மேலும், விபத்துகளில் சிக்கி, ஆஸ்பத்திரிக்கு அவசர கிசிச்சைக்காக வருபவர்களைக்கூட, முதல் உதவி செய்யாமல், பதிவு சீட்டு பெற்றுவரவேண்டும் என்று டாக்டர்கள் துரத்துவதாக புகார்கள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களே ரத்தம் சொட்டச்சொட்ட வரிசையில் நின்று டோக்கன் வாங்க வேண்டி உள்ளது. இதையும் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு முதலில் சிகிச்சை அளிக்க டாக்டர்களை அறிவுறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்