ஈரோடு சக்தி மாரியம்மன் கோவிலில் உண்டியலை மீண்டும் உடைத்து காணிக்கை திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு சக்தி மாரியம்மன் கோவிலில் மீண்டும் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-10-18 20:59 GMT
ஈரோடு
ஈரோடு சக்தி மாரியம்மன் கோவிலில் மீண்டும் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சக்தி மாரியம்மன்
ஈரோடு பழையபாளையம் ஓடை பகுதியில் சக்தி மாரியம்மன், மதுரை வீரன் கோவில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலில் வழிபாடு செய்து வருகிறார்கள். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் 2-வது முறையாக இந்த கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் உண்டியல் உடைப்பு
நேற்று முன்தினம் வழக்கம்போல் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கோவில் நடை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவிலின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் தெரிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வலைவீச்சு
உடனே இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் இரும்பு கேட்டில் போடப்பட்டு இருந்த 2 பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த காணிக்கைகளை திருடி சென்றதும் தெரியவந்தது. 
மேலும் கோவில் முன்பு இருந்த 3 வேல்களையும் மர்ம நபர்கள் பிடுங்கி திருட முயன்று உள்ளனர். ஆனால் பிடுங்க முடியாததால் அதை அப்படியே  விட்டு விட்டு சென்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, உண்டியல் பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்