கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கைக்குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கைக்குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்
மக்கள் குறை தீர்க்கும் முகாம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் சேலம் தாதம்பட்டி நேரு நகரை சேர்ந்த நந்தினி (வயது 20), தனது 2 மாத கைக்குழந்தை மற்றும் அவரது தாய் ராதா ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
திடீரென்று அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் நந்தினி மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கிக்கொண்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
தீக்குளிக்க முயற்சி
இது குறித்து நந்தினி கூறும் போது, நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தை சேர்ந்த ரவிக்குமாரும், நானும். காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்த 2 மாதத்தில் இருந்தே கணவர் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார். மேலும் 2 மாதம் கர்ப்பமாக இருந்த போது வரதட்சணை கேட்டு என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
எனக்கு பெண் குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகிறது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன். எனவே எனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். வரதட்சணை கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
தாதம்பட்டி சாமி நகர் மக்கள்
சேலம் தாதம்பட்டி சாமிநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக சேலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து உள்ளது.
மேலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. அல்லிக்குட்டை ஏரி மூழ்கி அதில் இருந்து நீர் வெளியேறி ஊருக்குள் வருகிறது. எனவே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்து உள்ளோம் என்று கூறி உள்ளனர்.
சாதிச்சான்று கேட்டு மனு
சேலம் மாவட்ட மலைக்குறவன் கல்வி, பொருளாதார முன்னேற்ற சங்க செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சிலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடியின மலைக்குறவன் இனத்தை சேர்ந்த பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும், இலவச வீட்டு மனைப்பட்டா, தொகுப்பு வீடு ஆகியவை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பனமரத்துப்பட்டி அருகே உள்ள ஜருகுமலை பகுதி மக்கள் கொடுத்த மனுவில் அடிப்படை வசதி செய்த தர வலியுறுத்தி பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே ஜருகுமலை பகுதியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தனிக்கவனம்
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் 408 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 11 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனு மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஆலின் சுனேஜா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.