பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்தது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக, பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்தது.

Update: 2021-10-18 20:12 GMT
நெல்லை:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக, பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்தது. இதையொட்டி அணை பகுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா நேரில் ஆய்வு செய்தார்.

நீர்மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று வறண்ட வானிலையே நிலவினாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் சில இடங்களில் தொடர்ந்து லேசான மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து நீடிப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று மேலும் 5 அடி உயர்ந்தது. நேற்று முன்தினம் 131.30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் 5.10 அடி உயர்ந்து 136.40 அடியை எட்டியது.

பாபநாசம் அணையுடன் இணைந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 147.90 அடியில் இருந்து 148.06 அடியாக உயர்ந்தது. இந்த 2 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 6,530 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2,989 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

உபரிநீர் திறப்பு

மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.50 அடியில் இருந்து 76.20 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,248 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
 
இதேபோன்று 52.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. அணை உச்ச நீர்மட்டத்தை எட்டியதால், அணைக்கு வருகிற 320 கன அடி தண்ணீரும் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை முதன்மை செயலாளர் அபூர்வா நேற்று பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 அணைகளுக்கு வருகிற நீர்வரத்து குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வருகிறது. அணைகளிலும் நீர் இருப்பு உச்சத்தில் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வரத்து உள்ளது.

ஆற்றில் குளிக்க வேண்டாம்

கடந்த ஜனவரி மாதம் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர், கடனாநதி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி என மொத்தம் வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

தற்போதும் அணைகளுக்கு நீர்வரத்து மற்றும் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் அதிகளவு உள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றுக்கு பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம்.

127 பாதுகாப்பு மையங்கள் தயார்

மாவட்டத்தில் 88 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு, அங்கு 127 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரமான விக்கிரமசிங்கபுரத்தில் மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 70 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மின்வாரிய செயற்பொறியாளர் ரங்கராஜ், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், அம்பை தாசில்தார் வெற்றிச்செல்வி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்