நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மங்களமேடு:
குன்னம் வட்டம் ஆடுதுறையில் குற்றம் பொறுத்தவர் கோவிலில் நேற்று மாலை சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வில்வம், அரளி, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கு, பக்தர்களால் வழங்கப்பட்ட எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அருகம்புல் மாலை சாற்றப்பட்டது. பின்னர் வில்வத்தால் அர்ச்சனை மற்றும் தீபாராதனையும், இதையடுத்து மூலவருக்கு தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் அகிலா, கோவில் குருக்கள் கார்த்திக், உற்சவதாரர்கள், சிவனடியார்கள், சிவதொண்டர்கள் செய்திருந்தனர். பல மாதங்களுக்குப் பிறகு கோவில் திறக்கப்பட்டு பிரதோஷ விழா நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் அத்தியூர், ஒகளூர் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.