அரசு டாக்டர்கள் சங்க தலைவர் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு சோதனை
மதுரையில் அரசு டாக்டர்கள் சங்க தலைவர் வீடு, மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மதுரை,
மதுரையில் அரசு டாக்டர்கள் சங்க தலைவர் வீடு, மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிபவர் செந்தில். இவர் அரசு டாக்டர்கள் சங்க தலைவராக உள்ளார். இவரது வீடு செக்கானூரணியில் உள்ளது. அந்த வீட்டின் கீழே மருத்துவமனை நடத்தி வருகிறார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு தொடர்புடைய வீடு, நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். அதன் ஒரு பகுதியாக டாக்டர் செந்தில் வீடு மற்றும் மருத்துவமனையில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஹெக்டேர் தர்மராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் திடீரென்று சோதனை மேற்கொண்டனர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?
சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனையில் வீடு மற்றும் ஆஸ்பத்திரியில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவருகிறது.அந்த ஆவணங்களில் அடிப்படையில் டாக்டர் செந்திலிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு டாக்டர்கள் சங்க தலைவர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை டாக்டர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.