குடும்ப தகராறில் பெண் அடித்துக் கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட மகன் கைது
உளுந்தூர்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண்ணை அடித்துக்கொன்ற அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
உளுந்தூர்பேட்டை
தொழிலாளி
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை(வயது 60). இவருக்கு கிருஷ்ணமூர்த்தி மற்றும் விமல்ராஜ் என 2 மகன்களும், சந்திரா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. அஞ்சலை மற்றும் அவரது 2 மகன்களும் ஒரே வீதியில் தனித்தனியே வசித்து வருகின்றனர். விமல்ராஜ் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார்.
தகராறு
இந்த நிலையில் விமல்ராஜின் மனைவி ராஜலட்சுமிக்கும், அஞ்சலைக்கும் இடையே அடிக்கடி வாய்த் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதை அறிந்து பெங்களூருவில் இருந்து வந்த விமல்ராஜ் அவரது மனைவிக்கு ஆதரவாக இருந்து அஞ்சலையிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தாய் என்றும் பாராமல் கையால் தாக்கினார். படுகாயம் அடைந்த அஞ்சலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கைது
இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அத்திப்பாக்கம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.