மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலியை பறிப்பு

கரூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-10-18 17:41 GMT
கரூர்
தங்கச்சங்கிலி பறிப்பு
கரூர் அருகே உள்ள புஞ்சை புகளூரை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 43). இவர் கரூரில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வேலை முடித்து கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தூலிப்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளி அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், கலைச்செல்வியிடம் உங்களது சேலை  மொபட்டின் சக்கரத்தில் சிக்குவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கலைச்செல்வி மொபட்டின் வேகத்தை குறைத்து பின்னால் திரும்பி பார்த்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்மநபர்கள் கலைச்செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 4 ½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி திருடன்... திருடன்... என சத்தம் போட்டர். அதற்குள் மர்மநபர்கள் தங்கச்சங்கிலியுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து வாங்கல் போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்