கோவில் நகைகளை உருக்குவது ஊழலுக்கு வழிவகுக்கும்; காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு
கோவில் நகைகளை உருக்குவது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.;
திண்டுக்கல்:
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த நகைகளை பாதுகாப்பதற்கு மட்டுமே அரசுக்கு அனுமதி உண்டு. ஆனால் நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி அதை வங்கியில் முதலீடு செய்ய அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கு சட்டத்தில் இடமில்லை. மேலும் கோவில் நகைகளை உருக்குவதில் அரசு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என தெரியவில்லை. கோவில் நகைகளை உருக்குவது ஊழலுக்கு வழிவகுக்கும். எனவே நகைகளை உருக்குவதை எதிர்த்து வருகிற 26-ந்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்றார்.
இதையடுத்து கோவில் நகைகளை உருக்குவதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் திண்டுக்கல் வாணிவிலாஸ் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் மேற்கு ரதவீதி வழியாக கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது கோவில் நகைகளை உருக்குவதை எதிர்த்து துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில செயலாளர் செந்தில்குமார், இணை அமைப்பாளர் ராஜேஷ்குமார், மதுரை கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர்கள் சஞ்சீவிராஜ், வீரதிருமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.