தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி:
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,590 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில், நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1,632 கனஅடியாக அதிகரித்தது. அணையில் உள்ள 3 சிறிய மதகுகள் வழியாக பாசன கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றிலும் வினாடிக்கு 1,506 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நேற்றைய நீர்மட்டம் 50.75 அடியாக இருந்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரிக்கும் பட்சத்தில் பிரதான மதகுகளில் தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.