மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தனியார் வங்கி ஊழியர் பலி
பழனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்துபோனார்.
பழனி:
பழனி அருகே உள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 26). தனியார் வங்கி ஊழியர். நேற்று முன்தினம் இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளில் பழனி நகராட்சி அலுவலக சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பழனி இந்திராநகரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன், கருப்புசாமியின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் காயமடைந்த பிரபாகரனுக்கு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.