காட்பாடி டாக்டரிடம் ரூ.50 லட்சம் மோசடி

ஆம்னி பஸ் தொழில் தொடங்குவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காட்பாடியை சேர்ந்த டாக்டர், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார்.

Update: 2021-10-18 17:14 GMT
வேலூர்

ஆம்னி பஸ் தொழில் தொடங்குவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காட்பாடியை சேர்ந்த டாக்டர், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார்.

தொழில் தொடங்க ரூ.50 லட்சம்

காட்பாடி காங்கேயநல்லூர் பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர் டாக்டர் அனுஷ்குமார். இவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார்.
 அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு கடந்த 2013-ம் ஆண்டு வேலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் இருவரும் சேர்ந்து 2 ஆம்னி சொகுசுபஸ் வாங்கி அதனை தனியார் பஸ்நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து வருமானம் ஈட்டும் தொழில் தொடங்கலாம் என்று கூறினார். அதையடுத்து அவரை நம்பி எனது நண்பர்கள், உறவினர்கள் உள்பட பலரிடம் கடன் வாங்கி 2 தவணைகளில் ரூ.50 லட்சம் கொடுத்தேன்.

கொலை மிரட்டல்

சில நாட்களுக்கு பின்னர் சென்னைக்கு செல்லும்போது எனக்கு விபத்து ஏற்பட்டு அதற்காக தனியார் மருத்துவமனையில் சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தேன். இந்த சமயத்தில் என்னிடம் இருந்து பணத்தை பெற்றவர் ஆம்னிபஸ் தொழில் தொடங்கவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு சில மாதங்களில் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறி காலம் கடத்தி மோசடி செய்து வந்தார்.

தற்போது பணத்தை கேட்டால் தரமறுப்பதுடன் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவரிடமிருந்து என்னுடைய பணம் ரூ.50 லட்சத்தை மீட்டு தந்து, கொலை மிரட்டல் விடுத்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
டாக்டர் அனுஷ்குமார் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயரும், பா.ஜ.க. மாநில செயலாளருமான கார்த்தியாயினியின் கணவர் ஆவார். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்