தெள்ளூர் ஊராட்சியை 2-ஆக பிரிக்க வேண்டும். குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு

6,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள தெள்ளூர் ஊராட்சியை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று குறைதீர்வுநாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2021-10-18 17:09 GMT
வேலூர்

6,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள தெள்ளூர் ஊராட்சியை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று குறைதீர்வுநாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, துணை கலெக்டர் புண்ணியகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 366 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

வீட்டுமனை பட்டா

பேரணாம்பட்டை அடுத்த சாலாப்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் 20 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேலூர் அம்பேத்கர்நகரை சேர்ந்த திருநங்கை சனா அளித்த மனுவில், நான் இளங்கலை பொருளாதாரம் பயின்றுள்ளேன். மூன்றாம் பாலினத்தவர் என்ற அடிப்படையில் எனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

காட்பாடி தாலுகா முத்தரசிக்குப்பம் அருகே உள்ள மதுரா கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சின்னபாப்பாம்மாள் அளித்த மனுவில், எனக்கு சொந்தமான சொத்து, நகை, பணத்தை என்னுடைய 2 மகள்களும் பறித்து விட்டு, தற்போது அடித்து துன்புறுத்துகிறார்கள். எனது சொத்து, நகை, பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும் எனது மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தெள்ளூர் ஊராட்சியை பிரிக்க வேண்டும்

வேலூரை அடுத்த பெரியதெள்ளூரை சேர்ந்த பார்த்தசாரதி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெள்ளூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன.  6,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். எனவே தெள்ளூர் ஊராட்சியை 2-ஆக பிரித்து புதிதாக ஒரு ஊராட்சியை அடுத்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

பதிவுத்துறை

அதேபோன்று நேற்று முதன்முறையாக வேலூர் துணை பதிவுத்துறை தலைவர், வேலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களிலும் குறைதீர்வு கூட்டம் நடந்தது வேலூர் துணை பதவுத்துறை தலைவர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட பதிவாளர் ஸ்ரீதர் (தணிக்கை) தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். இதேபோன்று வேலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட பதிவாளர் சுடர்ஒளி (நிர்வாகம்) தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று கொண்டார்.


மேலும் செய்திகள்