அகரம் முத்தாலம்மனின் கண் திறப்பு நிகழ்ச்சி
அகரம் முத்தாலம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. பாரம்பரிய வழக்கப்படி இந்த கோவிலில் திருவிழா நடைபெற அம்மனின் உத்தரவு கிடைத்தது. இதையொட்டி முத்தாலம்மனின் கண் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை 6 மணி அளவில் நடந்தது.
இதைத்தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்கள் மத்தியில் உலா வந்து கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து, தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா விதிகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு திருவிழாவையொட்டி தீச்சட்டி எடுத்தல், மொட்டை அடித்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அம்மன் பூஞ்சோலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.