கேர்ன்ஹில் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவர விளையாட்டு உபகரணங்கள் அமைக்க திட்டம்

கேர்ன்ஹில் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவர விளையாட்டு உபகரணங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-10-18 14:17 GMT
ஊட்டி

கேர்ன்ஹில் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவர விளையாட்டு உபகரணங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேர்ன்ஹில் வனப்பகுதி

நீலகிரி மாவட்டம் ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அடர்ந்த வனப்பகுதி வழியாக காட்சிமுனை வரை நடந்து சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். பொருள் விளக்க மையத்தில் சிறுத்தைப்புலி, கடமான், நீலகிரி லங்கூர் குரங்கு ஆகிய வனவிலங்குகளின் உடல் பதப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. பறவைகளின் படங்களுக்கு கீழே உள்ள பட்டனை அழுத்தினால், அது ஒலி எழுப்பும். பூங்காவில் புலி, காட்டெருமை, சிறுத்தைப்புலி போன்றவற்றின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். மேலும் மரங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட தொங்கு பாலத்தில் நடந்து செல்லும்போது அசைந்தாடுவதால் திகிலுடன் கடந்து சென்று மகிழ்கின்றனர்.

மேம்படுத்த நடவடிக்கை

கேர்ன்ஹில் வனப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிறுத்தைப்புலி, காட்டெருமை போன்ற வனவிலங்குகளை பார்க்கலாம். இருப்பினும், இங்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க, அவர்களது குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கேர்ன்ஹில் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கவும், அவர்களை கவரவும் அதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் நடைபாதை ஓரங்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. புதிதாக நீலகிரி, தமிழ்நாடு வரைபடம் மாதிரி அமைக்கப்பட்டு இருக்கிறது. ஊட்டியில் உள்ள பிற சுற்றுலா தலங்களில் சிறுவர்கள், சிறுமிகள் விளையாட உபகரணங்கள் இல்லை. 

நுழைவு கட்டணம்

இதனால் கேர்ன்ஹில் வனப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறுவர்களுக்கு ஏற்ற சறுக்கு, ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முழு ஊரடங்குக்கு பிறகு இந்த வனப்பகுதியில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. பெரியவர்களுக்கு ரூ.20-ல் இருந்து ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. சூழல் சுற்றுலா மையங்களில் ரூ.20 நுழைவு கட்டணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்