அனுப்பர்பாளையம், அக்.19-
திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த சேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் வயது 23. தையல் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராமு 21. இருவரும் நண்பர்கள். கடந்த வாரம் மது குடிக்கும் போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சக்திவேல் குடிபோதையில் வாவிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ராமுவுக்கும், சக்திவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமு தான் மறைத்து வைத்திருந்த அருவாமனையால் சக்திவேலை சரமரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த சக்திவேல் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டதால் ராமு அங்கிருந்து தப்பி சென்றார். படுகாயமடைந்த சக்திவேல் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.