ஓட்டப்பிடாரத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், குடிநீர் ஆபரேட்டர்கள் சங்கம் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பஞ்சாயத்துக்களில் பணியாற்றிவரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி முடிந்த ஊராட்சி செயலர்களுக்கு தாலுகாவுக்குள் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் சங்க ஒன்றிய தலைவர் அர்ச்சுனன், தூய்மைப் பணியாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் முருகன் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க ஒன்றிய தலைவர் சாம்ராஜ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநில துணைத் தலைவர் பழனிசாமி, மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் கசாலி மரைக்காயர், பஞ்சாயத்து தலைவர் கூட்டமைப்புத் தலைவர் வேலாயுதசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.