ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி செயலர் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் பாலச்சந்திரன், துணைத்தலைவர் கர்ணன், செயலாளர் காளனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலகம் மூலம் வழங்க வேண்டும் அல்லது ஊராட்சி ஒன்றியம் மூலம் பெறும் வகையில் தற்காலிக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த ஊராட்சி செயலர்களுக்கு ஒன்றியத்துக்குள் பணியிட மாறுதல் செய்வதுடன், ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பதிவுறு எழுத்தருக்கு உண்டான அனைத்து அரசின் சலுகைகளையும் வழங்க வேண்டும், ஊராட்சி செயலர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஊராட்சி செயலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.