கனமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்வு வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது கேரள மாநிலம் மற்றும் முல்லைப்பெரியாறு, தேக்கடி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 16-ந்தேதி அணையின் நீர்மட்டம் 128.90 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 1,435 கனஅடியாகவும் இருந்தது.
2 நாளில் 4 அடி உயர்வு
இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133 அடியாக உயர்ந்தது. அதாவது 2 நாளில் 4 அடி உயர்ந்து உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1,435 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து 926 கன அடியாக அதிகரித்தது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் வரை வைகை அணைக்கு வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து வைகை அணைக்கு நேற்று முதல் வினாடிக்கு 1,800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் 5 ஆயிரத்து 399 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-முல்லைப்பெரியாறு-46.8, தேக்கடி-16, உத்தமபாளையம்-1, சோத்துப்பாறை-1.