கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை மூப்பன்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மூப்பன்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் அ.மாரீஸ்வரன் தலைமையில், துணை தலைவர் மாரியம்மாள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள், ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கோரிக்கை மனு
பின்னர் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் பாலசுப்பிர மணியனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மூப்பன்பட்டி பஞ்சாயத்தில் கடந்த 3 மாதங்களாக மன்ற கூட்டம் நடைபெறவில்லை. ஒருவருக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தோம். இதனை மறைப்பதற்கு பஞ்சாயத்து தலைவர் தன்னிச்சையாக ஊராட்சி செயலாளரை தற்காலிக பணி நீக்கம் செய்து, அது சமூக வலைதளத்தில் வந்துள்ளது. தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டதை கண்டிக்கிறோம். ஊராட்சி செயலரை தற்காலிக பணிநீக்கம் செய்ததை தலைவர் ரத்து செய்ய வேண்டும். தலைவர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
அவர்களிடம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
----------