இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
ஆண்டிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் இளையராஜா கண்டன உரையாற்றினார். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மண்டல துணை தாசில்தார் மணவாளனிடம் வழங்கினார்கள்.
இந்த மனுவில் ஆண்டிப்பட்டி வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம், பஞ்சமிநிலம், பூமிதான இயக்க நிலங்களை பிரித்து சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு 5 சென்ட் வீட்டுமனை வழங்க வேண்டும், ஆண்டிப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும், ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.