நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீடு இருந்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2021-10-18 00:20 GMT
திருவள்ளூர்,

திருவள்ளுர்-திருத்தணி இருவழிச்சாலை ஐ.சி.எம்.ஆர். பகுதியில் நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை சார்பாக 2 நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் மூலமாக 43 இடங்களிலும், கூட்டுறவுத்துறை மூலம் 5 இடங்களிலும் சேர்த்து மொத்தமாக 48 இடங்களில் அரசு கட்டிடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. காரீப் கொள்முதல் பருவம் 30.9.2021 வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 94 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது 1.10.2021 முதல் அரசின் புதிய நெல் கொள்முதல் விலையில் இதுநாள் வரை 5 ஆயிரத்து 588 மெட்ரிக் டன்னும், நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக 235 மெட்ரிக் டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மெட்ரிக் டன் வரை நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் சிறு, குறு விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சொர்ணவாரி பருவ நெல் மணிகளை சாலையோரங்களில் சேமித்து வைத்து சிரமப்படுகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு எந்த ஒரு தகுதியான விவசாயியும் விடுபடாமல் அவர்களிடமிருந்து உடனுக்குடன் நெல்மணிகளை கொள்முதல் செய்ய ஏதுவாக கூடுதலாக திருவள்ளுரில் இருந்து திருத்தணி செல்லும் இருவழிச்சாலையில் 2 நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 2 மற்றும் 3 நாட்களில் தொடர்ச்சியாக செயல்பட்டு 7 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 1000 மூட்டைகளுக்கு மேல் நெல் அறுவடை செய்திருப்பின் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு செய்து டோக்கன் பெற்று தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்து பயன்பெற வேண்டும்.

மேலும் இந்த நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து செயல் பட காரணமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் திருவள்ளுர் வட்ட வருவாய்த்துறை போன்ற துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு எனது பாரட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீடு இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபிநேசர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் (பொறுப்பு) முனுசாமி, தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் மருதநாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்