குடகில் காவிரி தீர்த்த உற்சவம் கோலாகலம்
குடகு மாவட்டம் பாகமண்டலாவில் உள்ள தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடகு:
காவிரி தாய்
கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் உயிர்நாடியாகவும், அம்மாநிலங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வரும் நீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு இருந்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் மற்றும் விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆறு குடகு மாவட்டம் பாகமண்டலாவில் உள்ள தலைக்காவிரியில் உருவாகிறது. அங்குகாவிரித்தாய் சிலை அமைந்திருக்கிறது.
தீர்த்த உருவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் காவிரி தாய்க்கு ஆண்டு தோறும் தீர்த்த உற்சவம் நடத்தப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டும் குடகு மாவட்டம், மடிகேரி தாலுகா, பாகமண்டலா அருகே உள்ள தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது. மதியம் 1.11 மணிக்கு மகர லக்னத்தில், தலைமை அர்ச்சகர் குரு ராஜாச்சார் தலைமையில் 12 சிறப்பு அர்ச்சகர்கள் கலந்துகொண்டு காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை செய்தனர்.
கடந்த ஆண்டு நள்ளிரவில்...
முன்னதாக காலையிலிருந்தே பிரம்ம பூஜை, நித்யபூஜை, குங்கும அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி இரவு 12.57-க்கு
கடக லக்னத்தில், நடைபெற்ற தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி தாயை வணங்கினர்.
குடகு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் தீர்த்த உற்சவத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால், பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். உற்சவத்தில் காவிரி தாய்க்கு குங்கும அர்ச்சனை செய்தபோது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் காவிரி தாய் வாழ்க என்று கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து அவர்கள் காவிரி தாய் கோவில் முன்பு அமைந்துள்ள குளத்தில் இருந்து புனிதநீரை எடுத்துச் சென்றனர். அந்த புனித நீரை வீட்டில் வைத்திருந்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
நீராட அனுமதி இல்லை
கொரோனா விதிமுறை கட்டுப்பாடு காரணமாக தீர்த்த குளத்தில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. உற்சவத்தை முன்னிட்டு பாகமண்டலாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.