சங்ககிரியில் பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி-ரூ.15¾ லட்சம் தப்பியது
சங்ககிரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சங்ககிரி:
சங்ககிரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏ.டி.எம். எந்திரம்
சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகே பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த பகுதியில் மருத்துவமனைகள், கடைகள் ஏராளமாக உள்ளதால் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் காணப்படும்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம். மையத்துக்கு வந்தனர். முகமூடி அணிந்து வந்த அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மீது கருப்பு பெயிண்டு அடித்தனர். பின்னர் வெல்டிங் எந்திரம் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருட முயன்றனர்.
போலீசார் விசாரணை
அப்போது அங்கு ஆட்கள் நடமாட்டம் காணப்பட்டதால் அவர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த மையத்துக்கு பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக சங்ககிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில், இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர்.
எச்சரிக்கை ஒலி எந்திரம் பழுது
இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், ஏ.டி.எம். மையத்துக்கு காவலாளி இல்லை என்பதும், அங்கிருந்த எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி பழுதாகி இருந்ததும், இதை தெரிந்து கொண்டுதான் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்த ரூ.15 லட்சத்து 70 ஆயிரம் தப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே போலீசார் ஏ.டி.எம். மையம் அருகே பிற கடைகள், நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
சூப்பிரண்டு நேரில் விசாரணை
இந்தநிலையில் திருட்டு முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
சங்ககிரியில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.