ராஜராஜசோழன் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா தடையை மீறிய 20 பேர் கைது தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சை அருகே ராஜராஜசோழன் சிலைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக தடையை மீறி திரண்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-17 20:05 GMT
வல்லம்:-

தஞ்சை அருகே ராஜராஜசோழன் சிலைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக தடையை மீறி திரண்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

150 அடி உயர சிலை

தஞ்சை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ஊராட்சி சோழர்புரத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு 150 அடி உயர சிலை அமைக்கப்படும் என்று இந்து எழுச்சி பேரவை தலைவர் பழ.சந்தோஷ்குமார் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று ராஜராஜ சோழன் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி நேற்று காலை தஞ்சை சிவகங்கை பூங்காவில் உள்ள குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்துக்கொண்டு பெரிய கோவிலுக்கு இந்து எழுச்சி பேரவை தலைவர் பழ.சந்தோஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர். இதில் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகவள்ளி ராமானுஜ சுவாமிகள் கலந்து கொண்டார். அப்போது புனித நீருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து மன்னார்குடி ஜீயர் மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

20 பேர் கைது

பின்னர் இந்து எழுச்சி பேரவை நிர்வாகிகள் அடிக்கல் நாட்டு விழாவுக்காக வண்ணாரப்பேட்டைக்கு காரில் புறப்பட்டு சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு ஜெயச்சந்திரன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா மற்றும் போலீசார், ‘இங்கு சிலை அமைக்க அனுமதி கிடையாது, நீங்கள் கலைந்து செல்லுங்கள்’ என கூறினர். அதற்கு பழ. சந்தோஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் திட்டமிட்டபடி சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தெரிவித்தார். இதையடுத்து தடையை மீறி திரண்டதாக கூறி பழ.சந்தோஷ்குமார் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்து பிள்ளையார்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்