சிறுபாக்கம் அருகே மரத்தில் கார் மோதி என்.எல்.சி.ஊழியர் பலி
சிறுபாக்கம் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதி என்.எல்.சி. ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுபாக்கம்,
மரத்தில் கார் மோதல்
நெய்வேலியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 55). என்.எல்.சி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நாமக்கல் தனியார் பள்ளியில் தங்கி படிக்கும் தனது மகள் சுவேதாவை (16) அழைத்து வருவதற்காக நேற்று அதிகாலை காரில் நாமக்கல் சென்றார். பின்னர் அவர், தனது மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து காரில் நெய்வேலிக்கு புறப்பட்டார்.
நேற்று மதியம் சேலம்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாக்கம் சோதனைச்சாவடி மையம் அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரம் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த பாலசுந்தரம் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மகளுக்கு தீவிர சிகிச்சை
பலத்த காயமடைந்த சுவேதாவை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.