மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டுவை லாரி ஏற்றி கொல்ல முயற்சி டிரைவருக்கு வலைவீச்சு

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டுவை லாரி ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-10-17 17:32 GMT
பண்ருட்டி, 

மணல் கடத்தல் 

பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மணல் கடத்தலை தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசை தொடர்பு கொண்டு கீழ்மாம்பட்டு கெடிலம் ஆற்றுக்கு சென்று, மணல் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 
அதன்படி தனிப்படையில் இருப்பவரும், புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவருமான சங்கர், தனது மோட்டார் சைக்கிளில் கெடிலம் ஆற்றுக்கு விரைந்து சென்றார். போலீசை கண்டதும், கெடிலம் ஆற்றில் இருந்து மணல் லாரியை டிரைவர் வேகமாக இயக்கினார். உடனே ஏட்டு சங்கர், அந்த லாரியை விரட்டிச் சென்றார். சிறிது தூரத்தில் லாரியை முந்திச்சென்று, லாரியை தடுத்து நிறுத்த முயன்றார்.

லாரியை ஏற்றி கொல்ல முயற்சி 

ஆனால் டிரைவரோ லாரியை நிறுத்தாமல், போலீஸ் ஏட்டு சங்கரின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட ஏட்டு சங்கர், படுகாயமடைந்தார். அவரை அந்த வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 
பிின்னர் மேல் சிகிச்சைக்காக சங்கர், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏட்டு மீது மோதிவிட்டு மணலை கடத்திச்சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டுவை லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்