குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்
குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து சாலையில் ஆறாக தண்ணீர் ஓடியது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியில் இருந்து குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் கிணத்துக்கடவு போலீஸ் நிலையம் அருகில் கோவை-பொள்ளாச்சி சாலையோரத்தில் திடீரென குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து குடிநீர் சாலையில் ஆறுபோல ஓடியது. இதன்காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு பாலத்தின் கீழ் பகுதி வழியாக கோவைக்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
சீரமைக்க கோரிக்கை
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட உதவி நிர்வாக பொறியாளர் பட்டன், இளைநிலை பொறியாளர் சரவணகுமார் ஆகியோர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு பகுதியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, குழி தோண்டி உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தொடர் மின்தடை காரணமாக ஏற்பட்ட அழுத்தம் காரணமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றால் குழாயில் உள்ள குடிநீரை வெளியேற்றினால் மட்டுமே சரிசெய்ய முடியும்.
அதனால் தற்போது குடிநீர் குழாயில் தண்ணீர் அகற்றப்பட்டு குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் குடிநீர் வினியோகம் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.