வாலாஜா பாலாறு அணைக்கட்டுக்கு 6 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

வாலாஜா பாலாறு அணைக்கட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் தண்ணீரில் மலர்தூரி வரவேற்றனர்.

Update: 2021-10-17 17:07 GMT
ராணிப்பேட்டை

வாலாஜா பாலாறு அணைக்கட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் தண்ணீரில் மலர்தூரி வரவேற்றனர்.
மலர்தூவி வரவேற்பு

வாலாஜா பாலாறு அணைக்கட்டுக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு நிரில் மலர் தூவி வரவேற்றனர்.

அப்போது பொதுப்பணித்துறை இளநிலைப் பொறியாளரிடம் ஆற்றின் நீர்வரத்து மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து அமைச்சர் ஆர்.காந்தி கேட்டறிந்தார்.

6,000 கன அடி

 அதற்கு செயற்பொறியாளர் பதிலளிக்கையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 369 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் 188 ஏரிகளும் உள்ளன. இதில் 82 ஏரிகள் 100 சதவீதமும், 28 ஏரிகள் 75 சதவீதமும், 43 ஏரிகள் 50 சதவீதமும், 72 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.

வாலாஜா பாலாறு அணைக்கட்டில் 6 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் சுமார் 2,500 கன அடி தண்ணீர் காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி, கோவிந்தவாடி ஏரிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. சுமார் 3 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் பாலாற்றில் திறந்துவிடப்படுகிறது. மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி 30.5 அடி உயரம் கொண்டது. இன்றைய நிலவரப்படி 28.8 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கண்காணிக்க வேண்டும்

ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் என்பதை தெரிவித்து இதை கண்காணிக்க காவல் துறை, வருவாய் துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். 

நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ஆனந்தன், பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் சிவசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்