வடகிழக்கு பருவமழையையொட்டி மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் ராபின் காஸ்ட்ரோ தகவல்

வடகிழக்கு பருவமழையையொட்டி மீட்பு பணிகளுக்கு தீயணைப்பு துறை தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட அலுவலர் ராபின் காஸ்ட்ரோ தெரிவித்தார்.

Update: 2021-10-17 16:52 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி, தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகளுக்கான உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படு்ம் பகுதியில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் கால மீட்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு வீரர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

அதிகாரி ஆய்வு

அந்த வகையில், விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு கருவிகள், ரப்பர் படகு உள்ளிட்டவைகளை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின் காஸ்ட்ரோ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தீயணைப்பு வீரர்கள், வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை காப்பாற்றுவது, இடிந்து விழும் கட்டிடங்களை அப்புறப்படுத்துவது, மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது போன்ற ஒத்திகைகளை செய்து காண்பித்தனர்.

121 வீரர்கள் தயார்

பின்னர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின் காஸ்ட்ரோ கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி 121 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதில் 14 பேர் கொண்ட கமாண்டோ பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அவர்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட்டு உடனடி மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் தயார் படுத்தப் பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் இளைஞர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி 35 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் உடனடி மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் ஒத்திகை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

 தொடர்ந்து பேரிடர் மீட்பு குறித்து கலெக்டர் உள்ளிட்ட அலுவலங்களிலும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்