நாமக்கல் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
நாமக்கல் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
நாமக்கல்:
நாமக்கல் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லாரி டிரைவர்
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் சோனு மகந்தி (வயது 30). லாரி டிரைவர். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சேஸ் மட்டுமே உள்ள லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரியை வள்ளிபுரத்தில் நிறுத்தி விட்டு, அவர் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள தனது நண்பர்களை பார்க்க இரவு 10 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தார்.
அப்போது பரமத்திவேலூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினிலாரியை நிறுத்துமாறு சைகை காட்டினார். இதையடுத்து அந்த மினி லாரியை அதன் டிரைவர் நிறுத்தினார். அப்போது அதில் 3 பேர் கேபினில் அமர்ந்து பயணம் செய்தனர். அவர்கள் நாங்கள் பெங்களூரு போகிறோம். நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என கேட்டனர். அதற்கு சோனு மகந்தி 10 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும். ரூ.50 தருகிறேன் ஏற்றி செல்லுங்கள் என கேட்டு உள்ளார். அதற்கு மினிலாரியில் வந்த நபர்கள் சம்மதம் தெரிவிக்கவே, சோனு மகந்தியும் லாரியின் கேபினில் ஏறி கொண்டார்.
செல்போன் பறிப்பு
போகும் வழியில் மினிலாரியில் இருந்த மர்ம நபர்கள் சோனு மகந்தியிடம் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பிடுங்கி கொண்டு, அவரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, லாரியில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் தலையில் காயம் அடைந்த சோனு மகந்தி நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக அவர் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் லாரி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.