தமிழ்நாட்டில்சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை. அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.;
ராணிப்பேட்டை
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
அமைச்சர்கள் ஆய்வு
ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள தமிழ்நாடு ஓட்டலை மேம்படுத்துவது குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேம்படுத்த நடவடிக்கை
ராணிப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஓட்டல் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் 24 தங்கும் அறைகளுடன் அமைந்துள்ளது. இந்த ஓட்டல் 15 ஆண்டுகள் 3 மாதம் தனியார் ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டு இயங்கி வந்தது. தற்போது ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. இந்த ஓட்டலை அரசே ஏற்று நடத்துவது, அதற்கான சாத்தியக்கூறுகள், ஓட்டலை மேம்படுத்துதல், புதிய வசதிகளை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரபலம் அடையாத சுற்றுலாத் தலங்களை கண்டறிந்து அவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக சுற்றுலா தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பிரபலமாக உள்ள 10 பிரபலங்களை கொண்டு பிரபலம் அடையாத சுற்றுலாத் தலங்களை கண்டறிந்து அவற்றின் படங்களை எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு அதனை பிரபலம் அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் ஓட்டல்கள் போன்று
இனிவரும் காலங்களில் தனியார் ஓட்டல்களில் உள்ள வசதிகளை போல் தமிழ்நாடு ஓட்டல்களிலும் அறைகள் பதிவு செய்வது, உணவு ஆர்டர் செய்வது, செல்போன் செயலிகள் மூலம் எளிதில் பதிவு செய்து பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாத்தலங்களை கண்டறியும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு ஓட்டல் மண்டல மேலாளர் முரளி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவக்குமார் (பொறுப்பு), வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, ஓட்டல் மேலாளர் பூபாலன் உள்பட பலர் உடனிருந்தனர்.