திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே செல்போன் கடையில் திருட்டு
திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே செல்போன் கடையில் திருட்டு போனது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் கலில் அகமது (வயது 27). இவர், திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஸ்பென்சனர் காம்பவுண்டு பகுதியில் செல்போன் பழுதுநீக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று காலையில் அவருடைய கடையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு பாதி திறந்த நிலையில் இருந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கலில் அகமதுவுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் கடைக்கு விரைந்து வந்து அவர் பார்வையிட்ட போது, கடையில் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் பழுது நீக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 20 செல்போன்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த செல்போன் உதிரி பாகங்கள் திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசில் கலில் அகமது புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் கடையின் பூட்டை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.