வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.;
பழனி:
முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதேபோல் வார விடுமுறை, சுபமுகூர்த்தம், தமிழ் மாத பிறப்பு ஆகிய நாட்களிலும் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் வார விடுமுறை நாட்களில் பழனி முருகன் கோவில், பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி முதல் அனைத்து நாட்களும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
குவிந்த பக்தர்கள்
இதனால் விடுமுறை தினமான நேற்று, அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கொரோனா பரவலை தடுக்க படிப்பாதையில் செல்லும் பக்தர்கள் பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு குடமுழுக்கு அரங்கம் வழியே ஒருவழிப்பாதையில் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
எனவே அதிகாலையிலேயே குடமுழுக்கு நினைவரங்கம் முன்பு பக்தர்கள் திரண்டிருந்தனர். இதர வழிகளான ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய இடங்கள் மற்றும் பொது, கட்டளை, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.