தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு இல்லை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி

‘தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு இல்லை' என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-17 14:46 GMT

கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நேற்று முன்தினம் மாலை வரை அரசு மூலம் 5 கோடியே 6 லட்சம் பேருக்கும், தனியார் மருத்துவமனைகள் மூலம் 25 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 5 கோடியே 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகர் மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளில் 100 சதவீத தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 ஊராட்சிகளில், 10 ஊராட்சிகளில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
 கொரோனா 3-வது அலை
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. தற்போது வரை சுமார் 56 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 
தமிழகத்தில் 67 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 27 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு இல்லை. இருப்பினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். 
பொதுஇடங்களுக்கு செல்லும்போது முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். 2 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கு மத்திய பொருளாதார குழு அறிக்கை கிடைத்தவுடன், மத்திய அரசிடம் இருந்து போதிய அளவு மருந்துகள் கிடைத்த பின்னர் தடுப்பூசி செலுத்தப்படும். 
டெங்கு காய்ச்சல்
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான அவசர உதவி சிகிச்சை மையங்கள், டாக்டர்களுக்கான குடியிருப்புகள், அரசு மருத்துவமனையை சுற்றி தடுப்புச்சுவர் கட்டும் கோரிக்கைகள் குறித்து அரசின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின்  தாக்கம்  அதிகம் இல்லை. தற்போது வரை 381 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது ஆர்.டி.ஓ.முருகேசன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் அன்புச்செல்வன், அரசு தலைமை டாக்டர் பொன்ரதி, இ.எஸ்.ஐ.மருத்துவமனை டாக்டர் ஆஷிக், வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஸ்ரீதர், அரவிந்த், தாசில்தார் சந்திரன் மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்