தடுப்பணை கட்டும்பணி
தேவனூர்புதூர் ஊராட்சியில் தடுப்பணை கட்டும்பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தளி, அக்.18-
தேவனூர்புதூர் ஊராட்சியில் தடுப்பணை கட்டும்பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தடுப்பணை
உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தேவனூர்புதூர் ஊராட்சி உள்ளது. உடுமலை-ஆனைமலை சாலையில் திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையாக அமைந்துள்ள இந்தப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். இந்த பகுதியில் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் தடுப்பணை கட்டித்தருமாறு விவசாயிகள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஊராட்சிமன்ற தலைவர் தி.செழியன் நடவடிக்கை மேற்கொண்டார்.அதன் பயனாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 35 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பணை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டியூக்கு அருகே நடைபெற்று வரும் அந்தப் பணி தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பணியும் முடிவடைய உள்ளதால் அதில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் நிலத்தடி நீர் இருப்பு உயர வாய்ப்பு உள்ளது.
சுகாதார வளாகம்
அதேபோன்று ஊராட்சி பகுதியில் சுகாதார வளாகம் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ஊராட்சி மன்ற நிர்வாகம் புதிதாக சுகாதார வளாகத்தையும் அமைத்துக் கொடுத்து உள்ளது. இதேபோன்று மற்ற வளர்ச்சி பணிகளிலும் ஊராட்சிமன்றத் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள், செயலர் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.