ரோந்து வாகனம் வழங்க வேண்டும்

திருமுருகன்பூண்டியில் போலீஸ் நிலையத்திற்கு ரோந்து வாகனம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-17 13:45 GMT
அனுப்பர்பாளையம்
திருமுருகன்பூண்டியில் போலீஸ் நிலையத்திற்கு  ரோந்து வாகனம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருமுருகன் பூண்டி 
திருப்பூர் மாநகரில் நிர்வாக வசதிக்காக அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தை பிரித்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம்  திறக்கப்பட்டது. தற்போது 65 போலீசாருடன் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலைய கட்டிடம்  சிறிய அளவில் இருப்பதால் போலீசார் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக ராக்கியாபாளையத்தில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்திற்கு முக்கிய அங்கீகாரமான குற்ற எண் வழங்கப்படாதது பெரிய குறையாகவே உள்ளது. 
குற்ற எண்ணை பதிவு செய்வதற்கு அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது. 
சில நேரங்களில் செல்போன் மூலமாக அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் குற்ற எண்ணை பதிவு செய்யும்போது ஒரே எண் 2 போலீஸ் நிலையங்களிலும் பதிவாகும் சூழல் நிலவுகிறது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் காரணமாக போலீசாருக்கு இடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு குற்றம்-குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பு (குற்ற எண்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
ரோந்து வாகனம்
இதேபோல் போலீஸ் நிலையத்திற்கென்று பிரத்யேக 4 சக்கர ரோந்து வாகனம் இல்லை. வழக்குகள் தொடர்பாக குற்றவாளிகளை நீதிமன்றம் மற்றும் சிறைக்கு அழைத்து செல்வதற்கு வாடகை வாகனங்களை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே போலீஸ் நிலையத்திற்கு 4 சக்கர ரோந்து வாகனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் போலீசாரிடம் உள்ளது. சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவை எல்லையாக கொண்டு திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கணியாம்பூண்டி, பாண்டியன்நகர், ராக்கியாபாளையம் உள்ளிட்ட ஒருசில பகுதிகள் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளாக உள்ளன. ஆனால் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவுக்கென தனி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை. குற்ற வழக்குகள் தொடர்பான பணிகளை சட்டம்- ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீசாரே கவனிக்கின்றனர்.  எனவே போலீஸ் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும், தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று போலீசார் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்