தடுப்பு சுவருடன் பாலங்கள் அமைக்கும் பணி மும்முரம்

ஊட்டி-கூடலூர் சாலையில் மண்சரிவை தடுக்க தடுப்பு சுவருடன் பாலங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2021-10-17 13:43 GMT
ஊட்டி

ஊட்டி-கூடலூர் சாலையில் மண்சரிவை தடுக்க தடுப்பு சுவருடன் பாலங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் ஊட்டி அருகே தலைகுந்தாவில் தரைமட்ட பாலம் இருந்தது. பருவமழை காலங்களில் வனப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் பெருக்கெடுத்து பாலத்தின் கீழ் பகுதி வழியாக காமராஜ் சாகர் அணையில் சேகரமாகிறது.

இதற்கிடையே வெள்ளப்பெருக்கின்போது மண் அடித்து வரப்பட்டு பாலத்தின் கீழ் படிந்தது. இதனால் மழைநீர் செல்ல முடியாமல் கனமழை பெய்யும் போதெல்லாம் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து வந்தது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

பாலங்கள் கட்டும் பணி

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் தரைமட்ட பாலத்தை அகற்றி தடுப்பு சுவருடன் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. மழைநீர் தேங்காமல் எளிதில் செல்லும் வகையில் பெரிய குழாய்கள் பொருத்தப்பட்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. சுற்றிலும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதே பகுதியில் மற்றொரு இடத்தில் மழைநீர் தேங்குவதால் சாலை சேதமடைந்து வந்தது. 

அங்கு தண்ணீர் எளிதில் செல்லும் வகையில்  தடுப்பு சுவருடன் கான்கிரீட் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஒரு பகுதியில் இந்த பணி முடிவடைந்து விட்டது. மற்றொருபுறம் தடுப்பு சுவருடன் பாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த 2 இடங்களிலும் சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது.

3 இடங்களில்...

ஊட்டி-கூடலூர் இடையே சூட்டிங்மட்டத்தில் இருந்து பைக்காரா பகுதி வரை 3 இடங்களில் மழைநீர் தேங்கியதால் சாலை சேதம் அடைந்து வந்தது. மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருந்தது. இதை தவிர்க்கவும், மழைநீர் தேங்காமல் தடுக்கவும் 3 இடங்களில் சாலையின் அடிப்பகுதியில் தடுப்பு சுவருடன்  பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 

தற்போது சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வருவதால், பணி முடிவடையாத பகுதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. மலைப்பிரதேசத்தில் கனமழை மற்றும் மாறிவரும் காலநிலை காரணமாக மண்சரிவு, நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு மழைநீர் தேங்கி மண் ஊறுவதே காரணமாகும். இதை தடுக்க குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கே சிறிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்