தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி மலைரெயிலில் பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி மலைரெயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்தார். பின்னர் தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்டு வைத்தார்.
ஊட்டி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி மலைரெயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்தார். பின்னர் தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்டு வைத்தார்.
மலைரெயிலில் பயணம்
தமிழகத்தில் புதிய கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 15-ந் தேதி வந்தார். அவர் ஊட்டி ராஜ்பவனில் தனது குடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று ராஜ்பவனில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி காரில் புறப்பட்டு பாதுகாப்பு வாகனங்களுடன் ஊட்டி ரெயில் நிலையத்துக்கு சென்றார். மதியம் 12.15 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னூருக்கு சென்ற மலைரெயிலில் தனது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்தார். மலைரெயிலில் முதல் வகுப்பில் கவர்னர் அமர்ந்து இருந்தார்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த பயணத்தின்போது மலைரெயில் குகைகளை கடந்து செல்வது, அடர்ந்த வனப்பகுதிகள், பசுமையான தேயிலை தோட்டங்கள் போன்ற இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தார். அந்த ரெயிலில் சுற்றுலா பயணிகளும் சென்றனர். குன்னூர் ரெயில் நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி வரவேற்றார். தொடர்ந்து கவர்னர் தனது குடும்பத்தினருடன் குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலில் மதிய உணவு அருந்தினார்.
பின்னர் மாலை 3.20 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். கவர்னர் மலைரெயிலில் பயணம் செய்ததால், ஊட்டி மற்றும் குன்னூர் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மரக்கன்று நட்டார்
இதையடுத்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு விக்கி மரக்கன்றை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். அவரது மனைவி லட்சுமி ரவி ருத்ராட்சை மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்றினார்.
பூங்காவில் ருத்ராட்சை மரம் மற்றும் பழமையான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருவது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கவர்னர் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.