ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த 4 நாட்களில் 31 ஆயிரத்து 556 பேர் வந்து உள்ளனர்.

Update: 2021-10-17 13:42 GMT
ஊட்டி

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த 4 நாட்களில்  31 ஆயிரத்து 556 பேர் வந்து உள்ளனர்.

தொடர் விடுமுறை

ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்தது. இந்த தொடர் விடுமுறையை ஊட்டியில் கழிக்கவும், தங்களது குடும்பத்தினருடன் பொழுதை போக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 

கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வாகனங்களில் வந்தனர். இதனால் ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-கூடலூர் சாலை மற்றும் ஊட்டி நகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஒரே நாளில்...

ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு முழு ஊரடங்குக்கு பின்னர் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 14-ந் தேதி 5 ஆயிரத்து 318 பேர், 15-ந் தேதி 9 ஆயிரத்து 668 பேர், நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 70 பேர், நேற்று 5,500 பேர் என மொத்தம் 31 ஆயிரத்து 556 பேர் வந்து உள்ளனர். இந்த பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கொண்டு ஆண்டுதோறும் நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.

படகு இல்லம்

நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மலர் மாடத்தில் பூத்துக்குலுங்கிய மலர்கள் மற்றும் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்களை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், அவ்வப்போது மழை பெய்ததாலும் பெரிய புல்வெளி மைதானம் சேறும், சகதியுமாக மாறியது.

ஊட்டி படகு இல்லத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். கடந்த 15-ந் தேதி, 9,200 பேர், நேற்று முன்தினம் 9,000 பேர் என மொத்தம் 18 ஆயிரத்து 200 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

மேலும் செய்திகள்