வாலிபரை ஏமாற்றி திருமணம்; பெண் உள்பட 3 பேர் கைது-புரோக்கர்களுக்கு வலைவீச்சு

வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புரோக்கர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-10-16 21:48 GMT
மேச்சேரி:
வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புரோக்கர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருமணத்துக்கு வரன்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது உறவினரான வாலிபருக்கு வரன் பார்த்து வந்தார். இதற்காக அவர் சேலத்தை சேர்ந்த திருமண புரோக்கரான மாரியப்பன் என்பவரை அணுகினார். மேலும் அவர் மாரியப்பனுக்கு ரூ.1 லட்சம் கொடுத்தார். 
இதையடுத்து மாரியப்பன் கோவை எப்.சி.ஐ. காலனியை சேர்ந்த கோமதி (49), கேரளாவை சேர்ந்த பிரபு (49) ஆகிய 2 பேரையும் திருமண புரோக்கர்கள் என்று கூறி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர்கள் 3 பேரும், வாலிபருக்கு வரன் இருப்பதாக தெரிவித்தனர்.
முதலிரவுக்கு மறுப்பு
அதன்படி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள புளியம்பட்டி தென்னிலை பகுதியை சேர்ந்த ராதா (32) என்பவரை மணப்பெண் என்று கூறி அறிமுகம் செய்து வைத்தனர். மேலும், கேரள மாநிலத்தை சேர்ந்த நளினி என்பவரை அவரின் தங்கை என்றும் கூறினர். இதையடுத்து ராதாவுக்கும், அந்த வாலிபருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவையில் அவர்களுக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து அந்த வாலிபர், ராதாவை நங்கவள்ளிக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். அப்போது ராதா முதலிரவுக்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வாலிபர் கேட்டபோது, அவர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாக கூறினார். இதனைக்கேட்டு அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.
3 பேர் கைது
பின்னர் ராதா சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ராகுல் (30) என்பவரை நங்கவள்ளிக்கு அழைத்து வந்து, இவர் தனது கணவர் என்று கூறினார். இதையடுத்து ராதா, வாலிபரை விட்டு விட்டு, ராகுலுடன் சென்று விட்டார். ஏற்கனவே திருமணமான பெண்ணை முறைகேடாக வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து நங்கவள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ராதா, ராகுல், கோமதி ஆகிய 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராதாவுக்கும், ராகுலுக்கும் திருமணமாகவில்லை என்பதும், ராதாவின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் ராதா, ராகுல், கோமதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் புரோக்கர்களான மாரியப்பன், பிரபு மற்றும் நளினி ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்