பெருமாள் மலையில் மண் சரிவால் ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது
பெருமாள் மலையில் மண் சரிவால் ராட்சத பாறை உருண்டு சாலையின் நடுவே விழுந்தது.
துறையூர்:
துறையூரை அடுத்த பெருமாள்மலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் சுமார் 1000 அடி உயர மலைமேல் அமைந்துள்ளது. நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக அந்த கோவிலுக்கு படிக்கட்டு வழியாகவும், இருசக்கர வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் பெருமாள்மலைக்கு சென்றனர். இந்நிலையில் துறையூர் பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாமி தரிசனம் செய்த பக்தர்கள், பெருமாள்மலையில் உள்ள மண்டபங்களில் நின்றார்கள். இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மட்டும் மலையில் இருந்து கீழே இறங்கினர். இந்நிலையில் திடீரென்று மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை உருண்டு சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த நேரத்தில் வந்த கார் பாறை விழுவதற்கு முன்பே அந்த இடத்தை கடந்ததாலும், பக்தர்கள் யாரும் அந்த வழியாக வராததாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சாலையின் நடுவே பாறை விழுந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் மழை நின்ற பிறகு பெருமாள் மலையில் இருந்து கீழே இறங்கினார்கள். பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்பட்டது பெரும்பாலான பக்தர்களுக்கு தெரியாததால், குறைந்த அளவிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேற்று சாமி தரிசனம் செய்தார்கள். இதன் காரணமாகவும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு முறையும் பெருமாள் மலையில் மழை பெய்யும்போது மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் கீழே உருண்டு விழுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பெருமாள் மலையில் உள்ள சாலையையும், பக்கவாட்டு சுவர்களையும் பலப்படுத்த பக்தர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை பக்கவாட்டு சுவர்களில் கம்பிகள் அமைக்கப்படவில்லை. எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனடியாக பக்கவாட்டு சுவர்களை பலப்படுத்தவும், மண் சரிவு ஏற்படாத வகையிலும், விழும் நிலையில் உள்ள ராட்சத பாறைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.