காட்பாடியில் புகை மூட்டத்தில் சிக்கி வாலிபர் சாவு
காட்பாடியில் புகைமூட்டத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
காட்பாடி
காட்பாடியில் புகைமூட்டத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
காட்பாடி வி..ஜி..ராவ் நகர் சி.செக்டார் பகுதியை சேர்ந்தவர் கிளமெண்ட். இவருடைய மனைவி ஜாக்லின். இவர்களுடைய மகன் டெரன்ஸி ஜோயல் (வயது 22). கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் கிளமெண்ட் இறந்துவிட்டார். ஜாக்லின் துபாயில் தற்போது பணிபுரிந்து வருகிறார். டெரன்ஸி ஜோயல் அவரது சொந்த வீட்டில் மேல்தளத்தில் தனியாக வசித்து வந்தார். டெரன்ஸி ஜோயலுக்கு மதுபழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மதுபோதையில் சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அதை அணைக்காமல் படுக்கை மீது போட்டதால் தீப்பிடித்து புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது புகை மூட்டத்தின் காரணமாக டெரன்ஸி ஜோயல் மூச்சுத்திணறி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு காட்பாடி போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.