கணவருடன் காரில் வந்த ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேர் கைது

மணல்மேடு அருகே கணவருடன் காரில் வந்த ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-16 18:12 GMT
மணல்மேடு:
மணல்மேடு அருகே கணவருடன் காரில் வந்த ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயற்சி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசத்தை சேர்ந்தவர் வினோதா (வயது 38) ஆசிரியையாக பணி செய்து வருகிறார். இவர் காரில் தனது கணவர் ரவிசங்கருடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு கடலூர் மாவட்டம் கால்நாட்டாம்புலியூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக மணல்மேடு அருகே உள்ள முட்டம் பாலத்தில் வந்தபோது, அங்கு காருடன் நின்றுகொண்டிருந்த 2 பேரிடம் வழிகேட்டனர்.
அப்போது அவர்கள் வழி கூறுவது போல பேசிக்கொண்டே வினோதாவின் கார் அருகே வந்து, வினோதா கழுத்தில் அணிந்து இருந்த சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் பயந்து போன கணவன், மனைவி 2 பேரும் காரை எடுத்து தப்பிக்க முயன்றனர். அப்போது அந்த மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 
2 பேர் கைது
இதையடுத்து வினோதா அளித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு ெசய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வக்காரமாரி கீழத்தெருவை சேர்ந்த ரகுபதி (39), அகர மணல்மேடு காலனி தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் இன்பரசன் (25) ஆகியோர் ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்