தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியம் எளமனம் ஊராட்சி சீத்தப்பட்டியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் குளத்துப்பட்டி, சீத்தப்பட்டி, கொண்ணப்பட்டி போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பொதுமக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த ரேஷன் கடை யானது இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் பொதுமக்கள் பயத்துடன் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த ரேஷன்கடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சீத்தப்பட்டி, திருச்சி.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா பாப்பாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் முருகன் கோவில் தெரு 61-வது வார்டு பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மழைகாலத்தில் சேறும், சகதியுமாக இருந்ததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்துள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், தெற்கு காட்டூர், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கிருட்டிணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில் 7, 8-வது தெருக்களில் ரெயில்பாதையையொட்டிய காலி இடங்களில் வெட்டிய மரக்கிளைகளும், கழிவு பொருட்களும் கொட்டப்பட்டு குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சிலர் இந்த குப்பையில் தீ வைப்பதால் அப்பகுதியில் அவ்வப்போது புகைமண்டலம் போல் காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஹாஜா மைனுதீன், கணேசபுரம் , திருச்சி.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்
திருச்சி மாநகராட்சி14-வது வார்டில் இருக்கும் பூக்கொல்லை தெருவில் அமைக்கப்பட்டுள்ள 2 மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பம் அடியில் பெய்த மழையால் அரித்து கம்பிகள் முழுவதும் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இந்தப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் இந்த 2 மின் கம்பங்களும் முறிந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சையது முஸ்தபா, பூக்கொல்லைத் தெரு, திருச்சி.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை கணபதி நகரில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும் போது மழைநீர் வடிந்து செல்ல வழியின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கம்பரசம்பேட்டை, திருச்சி.
பயனற்ற நீர்த்தேக்க தொட்டி
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் சிருகளத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு இன்றி பழுதடைந்து பயனற்று கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இளையராஜா, சிறுகளத்தூர், அரியலூர்.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் 39-வது வார்டு எம்.ஜி.ஆர். கார்டன், 40-வது வார்டு நேரு முதல் தெரு, நேரு இரண்டாம் தெரு சாலை குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும், நடந்து செல்லும் பெண்களும், முதியவர்களும், சிறுவர்களும் நிலைதடுமாறி சேற்றி விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாகுல் ஹமீது, எடமலைப்பட்டிபுதூர், திருச்சி.
பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அரஃபா 1-வது வீதியில் 3 மின்கம்பங்கள் வரிசையாக உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்கம்பத்தையொட்டி பல வீடுகள் உள்ளன. இந்த நிலையில் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அசாருதீன், கோபாலப்பட்டிணம், புதுக்கோட்டை.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் ஆர். சி.பள்ளி பின்புறம் கரடிக்காடு செல்லும் வழியில் செல்லக்கூடிய மின்கம்பி ஆனது மிகவும் தாழ்வான உயரத்தில் செல்வதால் தரையிலிருந்து சுமார் 8 அடி உயரத்தில் இந்த மின் கம்பியானது செல்வதால் அவ்வழியாக நியாய விலை கடைக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரி மற்றும் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் கனரக லாரிகளும் அவ்வழியாக செல்லும் போது மின்கம்பியில் உரசும் அபாய நிலை உள்ளது. அவ்வாறு உரசி சென்றால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பியை உயர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அர்ப்புதசாமி, இலுப்பூர், புதுக்கோட்டை.
சாலையில் செல்லும் கழிவுநீர்
திருச்சி 27-வது வார்டு பழைய பால்பண்ணையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பழைய பால்பண்ணை, திருச்சி.